எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர்
காவிரி டெல்டா பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே (மே 24-ம் தேதி) தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் ‘அவரச கதியில்’ மேற்கொள்ளப்பட்டு, ‘அரைகுறையாக’ செய்து முடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் வழக்கமாக ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி நடைபெற்றாலும் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 2வது வாரத்தில் தான் தூர்வாரும் பணிகளுக்கான அரசாணை (ஜி.ஓ) வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
போதுமான கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணிகள் கண்துடைப்புக்காக அவசர கதியில் செய்து முடிக்கப்படுகின்றன.
எனவே, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். அப்பணிகள் அனைத்தும் மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என ஒரு நிரந்த அரசாணை (ஜி.ஓ) பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறினார்.
பாசன வாய்க்கால்களின் தலைமடைப் பகுதி 30 மீட்டர் அகலம் கொண்டதாக அரசு ஆவணங்களில் இன்றளவும் உள்ளது. ஆனால் உண்மையில் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு அதன் அகலம் சுருங்கி தற்போது 15-20 மீட்டர்தான் உள்ளது. அதிலும் வாய்க்காலின் இரு கரையிலும் கண்துடைப்புக்காக தலா 3 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே தூர்வாரப்படுகிறது.
தூர்வாரும் பணிகளைப் பார்வையிட சென்னையிலிருந்து வரும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரிகள் வெறுமனே பாசன வாய்க்கால்களின் தலைமடைப் பகுதியில் கொஞ்ச நேரம் நின்று பார்வையிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்று விடுகின்றனர்.
வாய்க்காலின் அளவு அரசு ஆவணங்களில் உள்ளவாறு இருக்கிறதா என அதன் தலைமடைப் பகுதியிலிருந்து கடைமடைப் பகுதிவரை நேரில் சென்று பார்வையிட்டால்தான் உண்மை நிலையை அவரால் அறிய முடியும்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன் குறைந்த கால அவகாசமே இருப்பதால் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தூர்வாரும் பணிகள் ‘கண் துடைப்புக்காக’ மேற்கொள்ளப்படுகின்றன.
வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால், பருவமழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும். அதற்கு தமிழக அரசே காரணம் ஆகும் என்று சுவாமிமலை விமல்நாதன் கூறினார்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அவசர கதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் தூர்வாரும் பணிகளை அரைகுறையாக மேற்கொண்டு, பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர் என்று தமிழக விவசாய சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் ‘கக்கரை’ ஆர். சுகுமாறன் கூறினார்.
உதாரணத்திற்கு, ஒரத்தநாடு வட்டம் பொட்டலங்குடிக்காடு மற்றும் அருமலை கிராமம் மேலவன்னிப்பட்டு பிரிவு வாய்க்கால் 3 கி.மீ. தூர்வாரும் பணி ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவதாக கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணி ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கப்பட்டு மே 20-ம் தேதி முடிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணியை திருமங்கலக்கோட்டையைச் சேர்ந்த சி.இராமாமிர்தம் என்ற ஒப்பந்தக்காரர் மேற்கொண்டு வந்தார்.
ஆனால் சில காரணங்களால் அவர் தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். வெறும் 0.5 கி.மீ தூரம்வரை தான் தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. மீதி 2.5 கி.மீ தூரம் தூர் வாரப்படவில்லை என்று கக்கரை ஆர். சுகுமாறன் கூறினார்.
தற்போது வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால் பருவமழையின்போது நிச்சயம் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும், அதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ஆகும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“