ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு

ஆந்திர மாநிலத்தில் `கோனசீமா’ என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்குப் பெயரிடுவதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அங்கு மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்கள், தற்போது 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்துக்கு `பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா’ எனப் பெயரிடலாம் என அரசு பரிசீலித்து வந்தது. இதற்கு சில அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வந்தன. இந்த நிலையில், அந்த அதிருப்தி அலை தற்போது கலவரத்துக்கு வித்திட்டிருக்கிறது.

அம்பேத்கர் பெயரை அந்த மாவட்டத்துக்குச் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், அந்தப் பகுதி மக்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆரம்பத்தில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளைக் கல்லெறிந்தும், தீயிட்டுக் கொளுத்தியும் சேதப்படுத்தினர். ஒருகட்டத்தில் ஆத்திர மிகுதியில் போராட்டக்காரர்கள் ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.விஸ்வநாத் வீட்டுக்கு தீ வைத்தனர். அவர் வீட்டின் முன்பிருந்த மூன்று கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால், அமைச்சர் அவர் குடும்பத்தினருடன் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். அதேபோல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சதீஷ் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமலாபுரம் டி.எஸ்.பி மாதவ் ரெட்டி காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். கோனசீமா மாவட்ட எஸ்.பி சுப்பா ரெட்டிக்குக் கல்லடி பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸார் வானத்தை நோக்கிச் சுட்டு போராட்டக்காரர்களைச் சம்பவ இடத்திலிருந்து கலைத்தனர். தொடர்ந்து பதற்ற நிலை நீடிப்பதால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ஆந்திர உள்துறை அமைச்சர் தனிதி வனிதா, “பல உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுத்தான் இந்த மாவட்டத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட நினைத்தோம். இதில் சர்ச்சை வெடித்து வன்முறை ஏற்பட்டது வருத்தம்தான். சிலர் அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதை எதிர்க்கின்றனர். இந்த வன்முறை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.