ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு, டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பெயரை மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசை எதிர்த்து அமலாபுரம் நகரில் நடந்த போராட்டத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளும் கட்சியை சேர்ந்த மும்மிடிவரத்தின் ஒய்எஸ்ஆர்சிபி எம்எல்ஏ பி சதீஷின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், போக்குவரத்து அமைச்சர் பி விஸ்வரூப்பின் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பர்னிச்சர்களுக்கு தீ வைக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கோனசீமா எஸ்பி கே சுப்பா ரெட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கும், பேருந்துகளுக்கும் தீ வைத்தனர். வன்முறையில் காவலர்கள் பலர் காயமடைந்ததாக தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். போராட்டக்காரர்களை தடுக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கற்களை வீசி போலீசாருக்கு பதிலடி கொடுத்தனர்.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஏப்ரல் மாதம் அறிவித்த 13 புதிய மாவட்டங்களில் கோனசீமாவும் அடங்கும். இம்மாத தொடக்கத்தில் அம்பேத்கரின் பெயரை மாவட்டத்திற்கு வைக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தபோது பிரச்சினை தொடங்கியது. மாவட்டத்தில் எஸ்.சி மக்கள்தொகை அதிகளவில் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள், சுற்றுலாப் பகுதியின் “பாரம்பரிய பெயரை” மீண்டும் மாவட்டத்திற்கு வைத்திட கோரிக்கை விடுக்கின்றனர்.
வங்காள விரிகுடாவிற்கும் கோதாவரி ஆற்றின் துணை நதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள கோனசீமா பேக்வாட்டர்ஸ் கேரளாவுடன் ஒப்பிடப்படுகின்றன.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிதான் போராட்டங்களுக்கு காரணம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வரூப் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, கோனாசீமா அம்பேத்கர் மாவட்டமாக மறுபெயரிடப்பட்டது. அங்கு அதிக மக்கள்தொகை எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால், குழப்பம் விளைவிப்பதற்காக தெலுங்குதேசம் போராட்டங்களை தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொது விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் ஆலோசகர், சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில், மக்கள்தொகையை கவனமாக பரிசீலித்த பிறகும், உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை ஏற்றும் தான், மாவட்டத்திற்கு மறுபெயரிட உத்தரவிடப்பட்டது. சிலர் இதை ஒரு பிரச்சினையாக மாற்றியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.