திருச்சி அரசு மருத்துவமனை இணைய சார்புநிலை மீட்பு மையத்தில் கடந்த 5 மாதங்களில், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 230 சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இணையதளத்துக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த கால கட்டங்களில் ஆன்ட்ராய்டு செல்போன் பயன்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக பள்ளி மாணவர்களின் இணையதள பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்தது. இதில் 3-ல் ஒரு மாணவர் செல்போனை படிப்புக்காக மட்டும் பயன்படுத்தாமல் ஆன்லைன் விளையாட்டு, யூடியூப்களில் படம் பார்த்தல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, இணையதளத்துக்கு அடிமையாகும் சிறார்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, பப்ஜி போன்ற விளையாட்டுகள் தடை செய்யப்பட்டது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இணையதள சார்புநிலை மீட்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்தது. திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதற்கென பிரத்யேகமாக வார்டு அமைக்கப்பட்டு 4 குழந்தைகள் நல மருத்துவர்கள் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் இணையதளத்துக்கு அடிமையான சிறார்களுக்கு சிகிச்சை, மனநல ஆலோசனை வழங்கி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் முதல் இதுவரை சுமார் 230 சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதும், இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் கே.வனிதா கூறுகையில்;
திருச்சி அரசு மருத்துவமனையில் அறை எண் 50-ல் இணைய சார்புநிலை மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 5 மாதங்களில் 230 சிறார்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 30 சதவீதத்தினர் சிறுமிகள். பெரும்பாலான சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கும், சிறுமிகள் யூடியூப் போன்ற இணையதளங்களுக்கும் அடிமையாகியுள்ளனர். இங்கு சிகிச்சை, கவுன்சிலிங் மூலம் இதுவரை 80 சதவீத குழந்தைகள் குணமடைந்து நல்லமுறையில் கல்வி பயில்கின்றனர். 20 சதவீதத்தினர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
சிறார்கள் செல்போனை அதிகளவில் பயன்படுத்தும்போது, தூக்கமின்மை, உணவின் மேல் நாட்டமின்மை, நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்பட்டால் உடனடியாக மீட்பு மையத்துக்கு அழைத்து வரவேண்டும். உரிய சிகிச்சை, ஆலோசனை மூலம் அவர்களை குணப்படுத்த முடியும்’’ என்று கூறியுள்ளார்.