ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் : பிரதமர் தெரிவிப்பு

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ‘இரண்டு வருட’ நிவாரணத் திட்டத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ராய்ட்டர் செய்திச் சேவைக்கு நேற்று (24) அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பதவியேற்ற பிரதமர் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் மேலும் பணவீக்கம் உயர்வடையும் எனவும் மேலும் தெருக்களில் போராட்டங்கள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடினமான நாட்களை கடக்கும் போது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர்கள் இன்னலுக்கு முகம் கொடுக்கும் போது இயற்கையாக அவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது இயல்பானதாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘போராட்டங்களினால் அரசியல் செயற்பாடுகள் சீர்குலையாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம. முடிந்தவரை செலவினங்களைக் குறைத்து மக்கள் நலனுக்காக முடிந்தளவு முயற்சிப்பதற்காகவே இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட உள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

1948 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், டொலர் பற்றாக்குறையினால் எரிபொருள் மற்றும் மருந்து வகைகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடியின் முக்கிய காரணமாக கொவிட் 19 தொற்று நோயினால், அதிகளவு வருமானம் ஈட்டி தரும் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியும் மற்றும் முன்னைய நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட வரிக் குறைப்புகளுமே காரணம்.

‘எமக்கு ரூபா மூலமான வருமானம் இல்லை என்றும் , இன்னும் ஒரு ரில்லியன் ரூபா பணத்தை அச்சடிக்க வேண்டும். இதனால் எதிர்வரும் மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40% ஐ விட அதிகரிக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

திங்களன்று வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் , ஏப்ரல் மாதத்தில் 33.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.இதனால் அரசாங்கம் பொது நிதியை சரிசெய்ய உதவும் வகையில் நேற்று (24)பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

இந்த அதிகரிப்பு அவசியம் எனவும் ஆனால் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர், அதே நேரத்தில் பணத்தை அச்சிடுவது பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கும் என்ற கவலையையும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

நிவாரண நடவடிக்கைகளுக்காக அரச செலவினங்களை குறைக்க மீளாய்வு செய்து வருவதாகவும் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
உதாரணமாக, சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகம் அதன் செலவினங்களைக் குறைக்க முடியாது எனவும் ஆனால் நாங்கள் செலவினங்களைக் குறைக்க கூடிய பல அமைச்சகங்கள் உள்ளன, எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், நாட்டிற்குள் புதிய முதலீடுகளை ஈர்க்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில் சர்வதேச கடன் வழங்குநரிடமிருந்து ஒரு ‘நிலையான கடன் தொகையினை எதிர்பார்க்கிறேன் என்றும் பிரதமர் கூறினார்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரசாயன உர இறக்குமதி தடையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் நட்பு நாடுகள் மற்றும் பலதரப்பு முகவர்களிடமிருந்து வெளிநாட்டு உதவிகளை பெற்று பிரதான உணவுப் பொருட்களை பெற்று வருவதாகவும் பிதமர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, அண்மைய மாதங்களில் உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கி இலங்கைக்கு பெரு எதவியாக இருந்து வருகிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பீஜிங்கில் இருந்து உரம் மற்றும் மருந்துகளை கோருவதற்காக அடுத்த வாரம் இலங்கைக்கான சீன தூதுவரை சந்திக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு நேற்று (24) அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.