இந்த காரணத்திற்காக மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கக் கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

Don’t deny TC to students citing non remittance of school fees, minister appeals to private schools: பள்ளி கல்வி கட்டணம் (ஃபீஸ்) செலுத்தாததைக் காரணம் காட்டி மாணவ, மாணவியர்க்கு மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்கள் வழங்க மறுக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தஞ்சை வந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பள்ளி கல்வி கட்டணம் கட்டாததால் எங்கள் பள்ளியில் டி.சி. கொடுக்க மறுக்கிறாங்க என யாராவது சொன்னால் அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என ஏற்கெனவே நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

இதை ஒரு கண்டனமாகவோ எச்சரிக்கையாகவோ விடுப்பதைக் காட்டிலும் நான் ஒரு வேண்டுகோளாக பள்ளி நிர்வாகத்திற்கு வைக்கிறேன். நீங்களும் எஜுகேஷனுக்கென்று உங்கள் பணியைச் செய்றீங்க. இல்லையென்று சொல்லவில்லை. உங்களுக்கும் பொருளாதாரம் முக்கியம். அதை நான் இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக பள்ளி மாணவர்கள் ஃபீஸ் கட்டவில்லை என்ற ஒரு காரணத்திற்காக அவர்களை பள்ளிக்கூடத்திற்குள் விடமாட்டேன் என நீங்கள் சொல்வது எந்த விதத்திலும் ஏற்கக்கூடியதாக இல்லை என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

முன்னதாக அவர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.2.12 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 11 பள்ளி கட்டிடங்கள் மற்றும் நகர நூலக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையும் படியுங்கள்: ரூ.31,400 கோடி; சென்னையில் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் இவைதான்!

அதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் 40 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.76 கோடி வங்கி நேரடிக் கடன் மற்றும் பெருங்கடனுக்கான காசோலை, கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலை மற்றும் தாட்கோ சார்பில் 30 நபர்களுக்கு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.