இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நலன் கருதி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
ஆனால், அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணை எண்488 மேற்கண்ட அறிவிப்பை சிக்கலாக்கியது. அதில், ‘முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/ மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது’ எனக் கூறப்பட்டுள்ளது.
திமுக அரசு 700 பேரை விடுதலை செய்ய கணக்கெடுப்பு நடத்தியது. அதில் வெறும் 38 பேர் தான் இஸ்லாமிய சிறைவாசிகள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் முழுமையாக கழித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் மாற்றமிருக்க கூடாது. சிறை வாழ்க்கை என்பது திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புதான். 20, 25 ஆண்டுகள் கழித்தும் இஸ்லாமியர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
மார்ச் மாதம் ஹரியானாவில் ராஜ்குமார் என்ற ஆயுள் சிறைவாசி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ’10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம். சட்டப்பிரிவு161 அடிப்படையில் அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம். இது மாநில உரிமை சம்பந்தபட்டது’ என தெரிவித்துள்ளது.
மாநில அரசின் உரிமைகளைப்பற்றி பேசும் திமுக 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும். மேலும் மத ரீதியான இந்த அளவுகோலை முன்வைத்து வெளியிடப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்’ பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மீதமுள்ள 6 பேரை விடுதலை செய்ய ஆர்வம் காட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இஸ்லாமிய சிறைவாசிகள் விஷயத்திலும் தீவிரம் காட்ட வேண்டுமென இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்த வேண்டுமென இந்திய தேசிய லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”