புது டெல்லி: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார். அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவரது புகைப்படம் ஒன்று இணையவெளியில் வைரலாகி உள்ளது.
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக இந்தோ – பசிபிக் பெருங்கடலில் சீன தேசத்தின் ஆதிக்கத்தை குறைப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த அமைப்பின் மூலமாக ஜனநாயக சக்திகளுக்கு புதிய உற்சாகமும், ஆற்றலும் கிடைத்துள்ளதாக குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களிடத்தில் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. அதோடு இந்தியாவின் நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கி இருந்தார். மேலும், அனைத்து நாட்டு தலைவர்களையும் தனித்தனியே சந்தித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மாநாட்டின்போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையவெளியில் பேசுபொருளாகி உள்ளது. அதில் பிரதமர் மோடி உட்பட நான்கு நாட்டு தலைவர்களும் உள்ளனர். அனைவரும் படிக்கட்டு வழியே நடந்து வரும் அந்தப் புகைப்படத்தில் பிரதமர் மோடி முதல் நபராக முன் செல்கிறார். அவரை பின்பற்றி ஜப்பான் பிரதமர், அமெரிக்க அதிபர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் வருகின்றனர்.
‘உலகை வழிநடத்தும் தலைவர்’ என்கிற ரீதியில் வைரலாக்கப்படு வரும் இந்தப் படத்தை தங்களது சமூக வலைதள பக்கத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி அமித் மாளவியா உட்பட பலரும் பகிர்ந்துள்ளார். அதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையிலான கேப்ஷன் கொடுத்துள்ளனர்.