லண்டன்: காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி, பிரிட்டனின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்டி கல்லூரியில், `இந்தியா 75′ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியின் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்திய மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்ட கேள்விகளும் எழுந்தன.
அப்போது ராகுல் பேசியதாவது: என் தந்தையின் மரணம்தான் என் வாழ்வின் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. எனது தந்தை மரணம் தொடர்பான கேள்விகள் வரும்போது மன்னிப்பு என்ற வார்த்தைதான் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆனால், இது மிகவும் துல்லியமானதாக இல்லை என்பது எனது கருத்து.
இந்தியா என்பது மாகாணங்களின் ஒருங்கிணைப்புதான். மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் இந்தியா, ஒரு ‘தேசம்’ என்றும், ‘பல்வேறு கலவை கலாச்சாரம்’ கொண்ட நாடு என்றும் பார்க்கப்படுகிறது. இதை நான் ஏற்கவில்லை. தேசம் என்ற வார்த்தை ஒரு மேற்கத்திய கருத்து. மாநிலங்கள் அல்லது மாகாணங்களின் ஒருங்கிணைப்புதான் இந்தியா. இவ்வாறு அவர் பேசினார்.