எஸ்.பி.பி.,யின் 75வது பிறந்த நாள்: இசை நிகழ்ச்சிக்கு சரண் ஏற்பாடு
தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்திய மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 6 தேசிய விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் பெற்றவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றவர். தயாரிப்பாளர், நடிகர் எனவும் திரைத்துறைக்கு பணியாற்றி உள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 75வது பிறந்த நாளை அவரது மகனும், நடிகரும், பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்.
ஜூன் 4ம் தேதி 'எஸ்பிபி லைவ்சன்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடம் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.