ஐபிஎல் இறுதிப் போட்டியில் அமீர்கானின் 'லால் சிங் சத்தா' ட்ரெய்லர் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாலிவுட் நடிகர் அமீர்கானின் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் ட்ரெயிலர், ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக நாக சைதன்யா இந்தப் படத்தில் நடித்துள்ளதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு வந்தநிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீண்டநாள் தயாரிப்பில் இருந்த அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தநிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்னதாக நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

image

இந்நிலையில், நடிகர் அமீர்கான் இதனை உறுதிசெய்து தனது அமீர்கான் புரொடக்ஷன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மே 29 அன்று மாலை 6 மணி முதல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்றும், ‘லால் சிங் சத்தா’ ட்ரெய்லர் ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வருகிற மே 29-ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.