கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்- முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

சென்னை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக அவர் கூறியதாவது:-
எதோ ஒரு காரணத்திற்காக பகையை வைத்துக்கொண்டு இதுபோல் செய்கிறார்கள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், காவல்துறை தன்னுடைய கண்ணியத்தை கம்பீரத்தை இழந்திருக்கிறது. காவல்துறை சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கை கையில் எடுத்து செயல்பட வேண்டும்.
தமிழக காவல்துறைக்கு என இந்திய அளவில் பெயர் இருக்கிறது. அரசியல் தலையீட்டால் அது இப்போது குறைந்துள்ளது.
அதன் வெளிப்பாடுதான் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை. இதுபோன்று சமீப காலமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. 
எனவே, முதலமைச்சர் உடனடியாக கவனம் கொடுத்து, ரவுடிகளை அடக்கி ஒடுக்க வேண்டும். மக்களுக்கு மிக முக்கியம் பாதுகாப்புதான். பாதுகாப்பே இல்லாத நிலையில் சாதாரண மனிதன் தன்னுடைய வேலையை செய்வான்.
பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். காவல்துறை கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களை சட்டப்படி தண்டிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 
கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் குடும்பத்தை பார்த்துக்கொள்வது கட்சியின் பொறுப்பு. அவர்களின் குடும்பம் எங்களுடைய குடும்பம்போன்றது. 
இப்போதாவது காவல்துறை விழித்துக்கொள்ளட்டும். முதல்வர் அவர்கள் இப்போதாவது கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்கட்டும். அதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடர் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனரிடம் கூறியிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். 3 நாட்களுக்கு முன்பு காவல்துறை கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் இந்த கொலையை தடுத்திருக்கலாம். 3 நாட்களுக்கு முன்பு போலீஸ் நிலையததில் புகார் அளித்திருக்கிறார்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறை பாலச்சந்தரை குற்றவாளிபோல் சித்தரிப்பதற்கு காட்டும் வேகத்தை, குற்றம் செய்தவர்களை பிடிப்பதற்கு ஏன் காட்டவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.