சென்னையில் கதவுகளை திறந்து போட்டபடி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட இருவர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அத்துமீறுவதோடு இல்லாமல் பெண்களை வீடியோ எடுத்து வைத்து பிளாக்மெயில் செய்யும் கும்பலின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு..
சென்னை அடையாறைச் சேர்ந்த 40 வயது கைம்பெண் அடையாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனியாக வசித்து வரும் தனது வீட்டிற்குள் தண்ணீர் கேட்டு நுழைந்த 20 வயது இளைஞன், தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்வதாக கூறியிருந்தார்.
அவருக்கு மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை வைத்து ரேப்பிஸ்ட் பிளாக்மெயிலர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 20 வயதான விஷால் என்ற பாலிடெக்னிக் மாணவர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த கைம்பெண் தனியாக வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதை ஒரு வாரம் தொடர்ச்சியாக விஷால் நோட்டமிட்டுள்ளான்.
அவருக்கு ஆதரவு யாரும் இல்லை என்பதையும், வீட்டிற்குள் நுழைந்ததும் கதவை பூட்டிக் கொள்ளாமல், தனது வேலைகளை அவர் தொடர்வதையும் நோட்டமிட்டு வீடு வாடகைக்கு தேடுவது போல உள்ளே புகுந்து, அவர் உஷாராகி விடக்கூடாது என்பதற்காக தண்ணீர் கேட்பது போல கவனத்தை திசை திருப்பி அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதே போல சென்னை கொடுங்கையூரில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணின் வாயை பொத்தி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.
நீண்ட போராட்டத்திற்கு பின்பு அவனது பிடியிலிருந்து தப்பிய அந்தப் பெண் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.
இந்த நிலையில் ஏற்கனவே கைலியுடன் வந்த அந்த நபர் மறு நாள் மீண்டும் திறந்து கிடந்த அதே பெண்ணின் வீட்டிற்குள் டிப்டாப் உடையணிந்து புகுந்துள்ளான். அந்த இளைஞனை பார்த்ததும் பயத்தில் அலறியதால் அவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகி இருந்த இளைஞர் கொடுங்கையூர் பகுதியில் அரிசி மண்டி நடத்தி வரும் ரமேஷ் என்பது தெரியவந்தது. அவனை பிடித்து விசாரித்த போது பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ரமேஷ், கோயம்புத்தூரில் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி வந்து மாதவரம் பால்பண்ணை பகுதியில் அரிசிமண்டி நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
ரமேஷ் கடந்த சில தினங்களாகவே இதே போன்று பல பெண்களிடம் இவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் இது தொடர்பாக அடையாளம் தெரியாததால் பெயர் குறிப்பிடாமல் சென்னை புறநகர் பகுதி காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணைக்கு பின்னர் அரிசி மண்டி உரிமையாளர் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டு கதவுகளை உள்பக்கமாக பூட்டி வைத்துக் கொண்டு வேலைகளை கவனிப்பது பாதுகாப்பானது என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.