Stalin speech highlights in Stella Maris college function: எனது வாழ்க்கையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மறக்க முடியாத கல்லூரி என்றும், கல்லூரி படிக்கையில் காவல் நிலையம் சென்றது ஏன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழா இன்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டு விழா மலரை பெற்றுக் கொண்டதுடன், புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத கல்லூரியாக இருந்துக் கொண்டிருக்கிறது. நான் பள்ளிப் படிப்பை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி. பள்ளியில் தான் படித்தேன். கோபாலபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல ஸ்டெல்லா மேரீஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து 29- சி என்ற பஸ்சில் தான் பயணம் செய்வேன். பள்ளியில் இருந்து திரும்பி வரும்போதும் இங்கு இறங்கி தான் வீட்டுக்குச் செல்வேன். அதுதான் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதே பஸ்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணம் செய்து பெண் பயணிகளுக்கு இலவசமாக பயணம் செய்யக்கூடிய அந்த திட்டத்தை ஆய்வு செய்தேன்.
அடுத்ததாக, 1971 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் கருணாநிதி தலைமையில் வெற்றி பெற்றபோது, அந்த தேர்தலை ஒட்டி நான் பிரச்சார நாடகங்களில் நடித்தேன். ஏறக்குறைய 40 நாடங்கள் தமிழகம் முழுவதும் நடத்தினேன். தேர்தலில் தி.மு.க. மீண்டும் கருணாநிதி தலைமையில் வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்தபிறகு வெற்றிவிழா நாடகத்தை சென்னையில் நடத்தினேன். அதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையேற்க வந்தார். எம்.ஜி.ஆர். முன்னிலை வகித்தார். அதற்காக விளம்பரம் செய்வதற்காக 2 நாட்களுக்கு முன்பு சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினோம். கடைசியாக நான் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்திருத்தபோது, என்னோடு வந்தவர்கள் வரிசையாக சுவரொட்டிகளை ஒட்டி வந்தனர். ரிக்ஷாவில் நான் கண் அயர்ந்து உறங்கிவிட்டேன். அதிகாலை 4 மணி இருக்கும். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வழியாக வந்தபோது, என்னுடன் வந்த ஒருவர் கல்லூரி வாசலில் சுவரொட்டி ஒட்டிவிட்டார். கல்லூரி சுவர்களில் கலை ஓவியம். அப்போது வாசலில் நின்றிருந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தேனாம்பேட்டை போலீசாருக்கும் புகார் சொல்லிவிட்டார். போலீசார் வந்து எங்களை கண்டித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது நான் யார்? என்று சொல்லவில்லை. சொல்லவும் விரும்பவில்லை. அப்படி நான் அப்பா பெயரை பயன்படுத்துபவன் அல்ல. அதற்கு பிறகு அவர்களாகவே தெரிந்துகொண்டு எங்களை வெளியே அனுப்பிவிட்டார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு காவலரால், நான் கண்டிக்கப்பட்டு, என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து அனுப்பி வைத்தார்கள்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் முன்னிலையில் மோடி பங்கேற்கும் முதல் விழா: சென்னை கோலாகலம்
இன்றைக்கு அதே காவல்துறைக்கும் பொறுப்பேற்று, முதலமைச்சராகவும் பொறுப்பேற்று கொண்டு இதே கல்லூரிக்கு வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. இக்கல்லூரியின் மதில் சுவரில் தமிழ் கலை, கலாசாரம் குறித்த ஓவியங்களை மாணவிகள் வரையும் காட்சியை, இந்த வழியாக செல்லும்போது அடிக்கடி பார்ப்பதுண்டு. அதை பார்த்துதான் பல்வேறு அரசு துறைகளுடன் பேசும்போது, ரயில்வே-சாலை மேம்பாலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் ஸ்டெல்லா மேரீஸ் மாணவிகள் போல ஓவியங்கள் தீட்டவேண்டும், என்று அறிவுறுத்தி இருக்கிறேன். பல இடங்களில் அது நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டதற்கு காரணம் நீங்கள் தான்.
இந்த கல்லூரி காலம் என்பது வாழ்வில் இன்னொரு முறை கிடைக்காது. எனவே கல்லூரி கால கல்வியை முழுமையாக முறையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதேவேளை உங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் படிப்பு, பட்டங்களை தாண்டி தனித்திறமைகள் கொண்டவர்களால் மட்டுமே முன்னேற்றம் காணமுடியும். அத்தகைய திறமைசாலிகளாக நீங்கள் வளர்ந்து உங்கள் குடும்பம் மட்டுமல்ல இந்த மாநிலமும், நாடும் வளரும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.