திண்டிவனம்:
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு
அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து ஒன்று நேற்று மாலை
வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அமர்ந்திருந்த 6-வது மற்றும்
7-வது பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை. இந்தக் கழிவறைகளில்
தண்ணீர் நிரப்பும் படி பயணிகள் ஒவ்வொரு ரெயில் நிலையமாக கோரிக்கை
விடுத்துள்ளனர். ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை.
இந்த ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு ரெயில்
நிலையம் வந்தது. அங்கும் தண்ணி நிரப்பாமல் வேகமாக ரெயில் புறப்பட்டது.
இதனால்
தர்ம சங்கடத்திற்கு உள்ளான பயணிகள் ஆத்திரமடைந்து திண்டிவனம் பாலத்தின்
மீது ரெயில் போகும் போது அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
உடனே ரெயில் கார்டு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இறங்கி வந்த
பயணிகளிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே
போலீசார் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பும் வசதி இல்லை.
விழுப்புரம் ரெயில் நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்புவதாக கூறி பயணிகளை
சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் விழுப்புரம் நோக்கி புறப்பட்டது.
இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் காலதாமதமாக சென்றது.
பொதுமக்கள்
அனைவரும் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யும் போக்குவரத்திற்கு
உறுதுணையாக இருக்கும் ரெயில்களில் தண்ணீர் பிரச்சினை போன்ற சிறு சிறு
பிரச்சினைகள் ஏற்படுவது பொதுமக்களின் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்
என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.