காங்கிரஸ் கட்சி அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. இதையொட்டி காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய உட்கட்சிப் பூசல் நிலவியது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல், “காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடுகளால் பலவீனமாகி வருகிறது என்பதே தற்போது நிகழ்ந்து வரும் நிதர்சனம். கட்சியை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம்” என்று ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அந்தக் கட்சியிலிருந்து தற்போது விலகியிருக்கிறார். மேலும், சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து மே 16-ம் தேதி ராஜினாமா செய்தேன். நாடாளுமன்றத்தில் சுதந்திரக் குரலாக இருப்பது முக்கியம்” என்றார்.