இன்று உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட கபில் சிபல் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்களுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். எப்போதுமே நாட்டில் சுதந்திரமான குரலாக ஒலிக்க நான் விரும்புகிறேன்.
கடந்த மே 16-ஆம் தேதியே நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற வலுவான கூட்டணி ஒன்று வேண்டும். எனக்கு இப்போதும், எப்போதும் ஆசம் கான் உறுதுணையாக இருக்கிறார். நன்றி” என்று கபில் சிபல் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்த ஜி23 மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவில் கபில் சிபல் முக்கியமானவர். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஹர்திக் படேல், பாஜகவில் இணைய உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த சுனில் ஜாக்கர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.