புதுடில்லி: ‘பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சயீது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கில், பிரிவினைவாதி யாசின் மாலிக், குற்றவாளி,” என, அறிவித்த சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் அவருக்கான தண்டனை விபரங்கள், இன்று(25ம் தேதி) அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இன்று காலை, யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரம் குறித்த வாதம் நடந்தது.
அப்போது யாசின் மாலிக் கூறுகையில், ஆயுதங்களை கைவிட்ட பின்னர், நான் மஹாத்மா காந்தியின் பாதையை பின்பற்றி வருகிறேன். அப்போது முதல் காஷ்மீரில் வன்முறையற்ற அரசியலை பின்பற்றுகிறேன் என்றார்.
யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என என்.ஐ.ஏ., வழக்கறிஞர் வாதாடினார்.
இதன் பின்னர், நீதிபதி, யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியதுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
பலத்த பாதுகாப்பு
தீர்ப்பு அளிக்கப்படுவதை முன்னிட்டு, காஷ்மீரிலும், அவரது வீடு அமைந்த பகுதியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டுரோன் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அங்கு குவிந்திருந்த யாசின் மாலிக் ஆதரவாளர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.