சென்னை : ”இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு, இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையில், 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க, டாக்டர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவலாக உள்ளது. அண்ணா பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவுகள் உள்ளன. எனவே, பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள், உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், 87 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களிலும், தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கல்லுாரிகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாணவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் பரவ துவங்கிய குரங்கு அம்மை நோய், தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement