குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலிய, ஜப்பான் ஆகிய நாடுகள், பிராந்திய பாதுகாப்பு குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தின. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற இந்த குவாட் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உட்பட நான்கு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பாதுகாப்பு குறித்த இந்த பேச்சுவார்த்தையின்போது, டோக்கியோ நகரில் ரஷ்ய, சீன போர் விமானங்கள் வானில் பறந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நோபுவோ கிஷி, “மொத்தம் நான்கு ஜெட் விமானங்கள். இரண்டு சீன குண்டுவீச்சு ஜெட் விமானங்கள், இரண்டு ரஷ்ய குண்டுவீச்சு ஜெட் விமானங்களுடன் இணைந்து, கிழக்கு சீனக் கடலிலிருந்து பசிபிக் பெருங்கடலை நோக்கிப் பறந்தன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு, சர்வதேச நாடுகள் பதிலடி கொடுத்துவரும் நிலையில், ரஷ்யாவுடன் இணைந்து சீனா இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இதனை கவனிக்காமல் இருக்கமுடியாது” எனக் கூறினார்.