புதுடில்லி : நம் நாட்டில், கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்கு, அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா இறப்பை 10 மடங்கு உயர்த்தி, 47 லட்சமாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலக சுகாதார நிறுவனத்தின், 75வது பொது சபை கூடியது.
இதில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:இந்தியாவில், கொரோனா இறப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் அதிருப்தி அளிக்கிறது. இந்த அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களை உள்ளடக்கிய, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கையாளும் கொரோனா இறப்பு குறித்த அளவுகோல் சரியல்ல.
அதன் அடிப்படையில் கணக்கிடுவதால், இறப்பு விகிதம் மாறுபடுகிறது. எனவே, ‘உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா இறப்பு கணக்கீடு சரியல்ல’ எனப்படும் தீர்மானத்தை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு தகவலை ஏற்காமல், உலக சுகாதார நிறுவனம் செயல்படுவது கவலை அளிக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement