கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 59-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்கள் மற்றும் திருவள்ளுவர், சின்சாங், ஸ்பைடர் மேன், மயில் உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
தொடக்க விழாவில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் பாண்டியராஜன் வரவேற்றார்.
4 அமைச்சர்கள் பங்கேற்பு
கோடை விழாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், மலர்க் கண்காட்சியை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். கண்காட்சி அரங்கை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்துவைத்தார். கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
மலர்க் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் டெய்சி, டெல்பீனியம், டையாந்தாஸ், கிளாடியஸ், பிளாக்ஸ், சால்வியா, பெல்கோனியம், பால்சம், செலோசியா, கேலெண்டுல்லா, ஆஸ்டர், அஸ்டமேரியா, டேலியா, மேரி கோல்டு, பேன்ஸி, ஆந்தூரியம், ஆண்ட்ரீனியம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்ச் செடிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
திருவள்ளுவர், மயில், மலைப்பூண்டு ஆகிய உருவங்களும் குழந்தைகளைக் கவரும் டைனோசார், ஸ்பைடர் மேன், சின்சாங் ஆகிய உருவங்களும் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. தமிழ் அன்னை, மரங்கொத்தி பறவை, சிங்கம், வாத்து உருவங்கள் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
மேலும், பூங்காவின் ஒரு பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்ச் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்க் கண்காட்சி நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்திருந்து, பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, ப.வேலுச்சாமி எம்பி, எம்எல்ஏக்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி மானாட்டம், மயிலாட்டம், கம்பு சுழற்றுதல், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொடைக்கானலில் நேற்று இதமான சூழல் நிலவியது. மாலையில் சிறிதுநேரம் மழை பெய்தது. மலர்க் கண்காட்சி மே 29-ம் தேதி வரையும், கோடை விழா, ஜூன் 2-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.