சென்னை: கத்திப்பாரா பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கான்கிரீட் பிளாக்குகள் பதிக்கப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, கிண்டி மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் நடைபெற்ற வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கன மழையின் போது மடுவண்கரையில் வெள்ள நீர் சூழ்ந்து, மழை நீர் வடிய தாமதம் ஏற்படுகிறது. இந்த வெள்ள நீரின் ஒரு பகுதி எம்.கே.என் சாலை வடக்கு வழியாக அண்ணா சாலையினை கடந்து ஆலந்தூர் சாலை வழியாக அடையாற்றினை அடைகிறது.
மறு பகுதி வெள்ள நீர் தற்போது முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் சாலை தெற்கு (எம்.கே.என் ரோடு) மற்றும் மடுவண்கரை பகுதிகளிலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் உள்ள சிறுபாலத்தினை கடந்து மசூதி காலனி, வண்டிக்காரன் தெரு வழியாக வேளச்சேரி ஏரியினை அடைகிறது. இதனால் மசூதி காலனி, வண்டிக்காரன் தெரு பகுதிகள் வெள்ளத்தினால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே மடுவண்கரை தெற்குப் பகுதியில் மழை காலங்களில் தேங்கும் நீரினை எம்.கே.என். சாலை வடக்கு வழியாக, ஜிஎஸ்டி சாலையை கடந்து அடையாற்றினை அடையும் வகையில் அகலமான மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்பட்டது.
ஆண்டுதோறும் கனமழையின்போது கத்திப்பாரா பகுதியில் சாலையின் இடது புறம் உள்ள ஹாப்லிஸ் ஹோட்டல் அருகே மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளது.
இதனை நீக்கிடும் வகையில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் உள்ள வார்க்கப்பட்ட கான்கிரீட் பிளாக்குகள் மூலம், சாலையின் குறுக்கே வெட்டிப்பதிக்கப்படும். இம்முறையான கட்டுமானத்தால் இரு தினங்களில் பாலத்தினை விரைவாகவும் செய்து முடிக்க இயலும். இங்கு வழக்கமான முறையில் பாலம் கட்டினால் ஏற்படும் காலதாமதமும் போக்குவரத்து இடையூறும் முழுவதுமாக தவிர்க்கப்படும்.
ஜவஹர்லால் நேரு சாலையில் (ஈக்காட்டுத்தாங்கல்) அம்பாள் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு கடந்த 2021 நவம்பர் மாதத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை போக்க நிரந்தர தீர்வாக அம்பாள் நகர் முதல் அடையாறு பாலம் வரை பழைய செங்கல் வளைவு வடிகாலுக்கு பதிலாக அளவில் பெரிய புதிய கான்கீரிட் வடிகால் அமைக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் 400 மீட்டர் நீளத்திற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் பணி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஆகஸ்டு 2022 மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.