சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பைக் கிடங்கு பகுதியில் ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்தநிலையில் கிடப்பதாக பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு ஆகிய காவல் நிலையங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆண் சடலத்தை பார்த்தபோது தலை மற்றும் இரு கைகள் இல்லை. மேலும் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டது.
அதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் மூன்று காவல் நிலைய போலீஸாருக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த எல்லைப் பிரச்னை காரணமாக போலீஸார் சடலத்தைக் கைப்பற்றுவதில் சிறிது நேரம் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சடலம் கிடந்த இடம் திருவேற்காடு காவல் நிலையம் என முடிவு செய்யப்பட்டு திருவேற்காடு போலீஸார் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், எரித்துக் கொலை செய்யப்பட்டவர் யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். சடலத்தில் தலை, இரண்டு கைகள் இல்லாததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார், “வேறு எங்காவது கொலை செய்து குப்பை கிடங்கில் வைத்து எரித்திருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி மூலம் குப்பை கிடங்கு பகுதியில் எந்த வாகனம் நின்றது போன்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். அதோடு காணாமல் போனவர்களின் பட்டியல் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.