செங்கல்பட்டு மாவட்டம், சாலவாக்கம் பகுதியில், கடனுக்கு பொருள் தரவில்லை என்று கடை உரிமையாளரை கோடாரியால் தாக்க வந்த மது போதை ஆசாமி குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாலவாக்கம் பகுதியில் கந்தசாமி-பரிமள தம்பதி தங்களது வீட்டிலேயே சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற மது போதை ஆசாமி, அந்த கடைக்கு வந்து கடனுக்கு பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவம் நடந்த நேற்றும் கந்தசாமி கடைக்கு சென்ற சதிஷ், கடனாக பொருட்கள் கேட்டுள்ளார். அதற்கு கந்தசாமி ‘கடன் இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தன் கையில் வைத்திருந்த கோடாரியால் கடை உரிமையாளர்கள் கந்தசாமி-பரிமளாவை தாக்க முயன்றார்.
கதவை பூட்டிக்கொண்டு உள்ளே சென்ற கந்தசாமி-பரிமளாவை கடுமையான வார்த்தைகளால் திட்டி கடையின் முன் பக்க கதவை கோடாரியால் தாக்குகிறார்.
அப்போது கந்தசாமி போலீசாருக்கு போன் போடுவதை தெரிந்துகொண்ட போதை ஆசாமி சதீஷ், உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினார். இந்த காணொளி தற்போது வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.