திருப்பதி, : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், பல தரிசனங்களுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.திருமலை திருப்பதி இணையதளத்தில், தேவஸ்தானம் மாதந்தோறும் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதை முன்பதிவு செய்து பக்தர்கள் பலர் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
இதன்படி, ஆக., மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை ஆகிய டிக்கெட்டுகள் நேற்று காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டன.இதேபோல், ஆகஸ்ட் மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகியவற்றுக்கான சேவா டிக்கெட்டுகள் நேற்று மதியம், 3:00 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் 26ம் தேதி மதியம் 3:00 மணிவரை தங்களின் விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், நாளை மாலை 6:00 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ‘மொபைல் போன்’ எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
தகவல் பெற்றவர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் ஆகஸ்ட் மாதத்திற்கான, வீட்டிலிருந்தபடியே ‘டிவி’ வழியாக பார்க்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல்சேவை, சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை 9:00 மணிக்கு துவங்க உள்ளது.
மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டோருக்கு, தேவஸ்தானம் ‘ஆன்லைன்’ வாயிலாக சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதன்படி ஜூன் மாத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணிக்கு ஆன்லைன் வாயிலாக வெளியிடப்பட உள்ளது. இதில் தினசரி, 1000 டிக்கெட்டுகள் கிடைக்கும். இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள், ஜூன் 1ம் தேதி முதல் மாலை 3:00 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.பக்தர்கள் இந்த தரிசன டிக்கெட்டுகள் அனைத்தையும் தாங்கள் விரும்பும் நாட்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement