15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடந்து வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதலாவது தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் புள்ளிப்பட்டியில் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த பட்லர் 89 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்தார். 2 சிக்ஸர் 2 பவுண்டரி அடித்த படிக்கல் 28 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில், ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், கேப்டன் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து 187 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாஹா (0) தவிர களமாடிய அனைவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்தனர். தொடக்க வீரர் சுப்மன் கில் 35 ரன்களும், மேத்யூ வேட் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா – டேவிட் மில்லர் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் அரைசதம் அடித்து, பின்னர் ஆட்டத்தை முடித்து வைத்த மில்லர் 5 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார்.
Congratulations to the @gujarat_titans as they march into the Final in their maiden IPL season! 👏 👏
Stunning performance by @hardikpandya7 & Co to beat #RR by 7⃣ wickets in Qualifier 1 at the Eden Gardens, Kolkata. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/O3T1ww9yVk#TATAIPL | #GTvRR pic.twitter.com/yhpj77nobA
— IndianPremierLeague (@IPL) May 24, 2022
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி வருகிற ஞாயிற்று கிழமை (மே 29ம் தேதி) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், 2வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதுகிறது.
புருவங்களை உயர்த்திய கேப்டன் பாண்டியா
இதுஒருபுறமிருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி அப்போது பலரது புருவங்களையும் உயரச் செய்தது. ஏனென்றால் அவர் அதற்குமுன் எந்தவொரு கிரிக்கெட் அணியையும் வழிநடத்திய அனுபவமும் இல்லாதவராக இருந்தார். ஆனாலும், தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை தொடர் தொடங்கியது முதல் காப்பற்றி வரும் கேப்டன் பாண்டியா அணியை சிறப்புடன் வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
கேப்டன் பதவியுடன், தனது தாற்காலி ஃபார்ம் அவுட் பஞ்சாயத்துக்கும் நடப்பு தொடரின் மூலமாக முடிவு கட்டியுள்ளார். மேலும், அவரது பேட்டிங் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு பந்துவீசும் தன்மை மூலம் தன்னை திட்டித் தீர்த்தவர்களை வாய்பிளக்க செய்துள்ளார். அவரது நிலையான ஆட்டத்தை உற்று கவனித்து வரும் பிசிசிஐ, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு மீண்டும் ‘இந்திய அணி’ வாய்ப்பு வழங்கியுள்ளது.
தோனி போல் கூல் கேப்டன்…
தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வரும் ஹர்திக் பாண்டியா, தொடரின் முதலாவது போட்டி முதல் களத்தில் சிறிதும் பதற்றத்தை வெளிப்படுத்தவில்லை. அவ்வப்போது சிடு முகத்தை காட்டுவாரே தவிர பொங்கி எழுந்து, சோர்ந்து விட மாட்டார். அணி தோல்வி கண்ட தருணங்களை சிறப்பாக சமாளித்து விடுகிறார். மேலும், இளம் மற்றும் மூத்த வீரர்களை அரவணைத்து செல்கிறார்.
மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியின் மறுஉருவமாகவே மாறியுள்ளார் கேப்டன் பாண்டியா. அளவு கடந்த அழுத்த நேரத்தில் தோனியை போல் கூலாக இருக்கும் வெளிப்பாடு தெரிகிறதே என்று அவரிடம் கேட்டபோது, ‘ஆம்’ என்று அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்
குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பிறகு, போட்டிக்கு பிந்தைய நேர்காணலில் தோனியைப் பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா, “எனது வாழ்க்கையில் மஹி பாய் மிகப்பெரிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் எனக்கு ஒரு அன்பான சகோதரர், அன்பு நண்பர், மற்றும் குடும்பத்தில் ஒருவர். என்னைப் பொறுத்தவரை, அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “என்னைப் பொறுத்த வரையில் நான் எல்லா விதத்திலும் வலுவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது எப்படி எல்லாப் பகுதிகளையும் என்னால் நிர்வகிக்க முடிந்தது, என்பது பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
கேப்டன் பதவிக்கு முன்பும், எல்லா சூழ்நிலையையும் கூலான முறையில் அணுகுவதை நான் எப்போதும் உறுதி செய்திருந்தேன். பொதுவாக, அந்த வழியில் நீங்கள் சிறந்த முடிவை எடுப்பீர்கள். எனது வாழ்க்கையிலும், எனது கிரிக்கெட் பயணத்திலும், அவசரப்படுவதை விட, அந்த 10 வினாடிகளை கூடுதலாகக் கொடுப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.