பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது ஆவடி காவல் ஆணையாளரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியினர் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் கடந்த 18.05.2022 அன்று புதன்கிழமை மாலை திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரியில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில கொள்ளை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.
அப்போது சட்டை கழற்றி அல்லையில் வச்சிக்கிட்டு நடந்துபோன சமுதாயம், செருப்பை தூக்கி தலையிலே வைத்துக் கெண்டு போன சமூதாயத்தை வணக்கத்துக்குரிய மேயர் என்று சொல்ல வைத்தது யார்? என பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில்; பேசினார். இது சமூக வலைதளங்களின் வாயிலாக பரவி தமிழ்நாடு முழுவதும் பட்டியலின சமூக மக்களின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அறிவுலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி ரிசர்வேசன் அடிப்படையில் பல இடங்களில் பட்டியலின மக்கள் இருபாலரும் மாநகராட்சி மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் ஒட்டு மொத்த பட்டியல் இனத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாதிய வன்முறையினை தூண்டும் வகையிலும் பட்டியல் இன மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையிலும் பொது வெளியில் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
இதளால் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும், இதர சட்டப்பிரிவுகளின் படியும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். மேலும் பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய லியோனியை பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இது தொடர்பாக கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM