குஜராத்: காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேலிடம் பாஜகவில் இணைவீர்களா என்று நிருபர்கள் கேட்க, ‘பாஜக ஏன் ஒரு ஆப்ஷனாக இருக்கக்கூடாது?’ என்று அவர் திரும்பிக்கேட்டார். இதனால், ஹர்திக் படேல் பாஜகவை நெருங்கிவருவது மேலும் உறுதியாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
குஜராத் தேர்தலில் பாஜக 7வது முறையாக வெற்றி பெறும் என்று ஏற்கெனவே பாராட்டியவர் தான் ஹர்திக் படேல். மோடியையும், மோடி ஆட்சியையும் புகழ்ந்திருக்கிறார். இந்நிலையில் இப்போது, ‘பாஜகவில் இணைவது ஏன் ஒரு ஆப்ஷனாக இருக்கக் கூடாது’ என்று வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “இப்போதைக்கு உறுதியாக எந்தத் திட்டமும் இல்லை. எனது நண்பர்கள், நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து மக்களுக்கு நலன் பயக்கும் முடிவை எட்டுவேன். ஒருவேளை பாஜகவில் இணைந்தால் அதற்காக அவர் மீது 2015ல் பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறு கோருவீர்களா என்ற கேள்விக்கு என் மீதான வழக்கிற்காக பேசமாட்டேன். ஆனால் என்னோடு சேர்த்து நிறைய பட்டிதார் இளைஞர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அவர்களுக்காக குரல் கொடுப்பேன்” என்றார்.
பாஜகவை நோக்கி பார்வையை கடத்திக் கொண்டே இருக்கும் ஹர்திக் படேல் ஆம் ஆத்மி மீதும் ஒரு பார்வையை வைத்துள்ளார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. அப்போதே அடுத்த இலக்கு குஜராத் என்று அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மியில் அவர் இணைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக குஜராத் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.