சென்னை : நேற்று இரவு 7.50 மணி அளவில் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலச்சந்திரன் போலீசார் பாதுகாப்புடன் சிந்தாரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார். பின் அருகில் இருந்த டீ கடைக்கு சென்ற அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாரிப்பேட்டை போலீசார் பாலச்சந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலச்சந்திரனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பிரதிப், சஞ்சய், கலைவாணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் அதை தவிர்த்து நண்பர்களை காண சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக இருதரப்பினரிடையே மேலும் மோதல் ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று சென்னை போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
இதற்கிடையே, ஹச் ராஜா தனது டிவிட்டர் பக்கம் மூலமாக பாஜகவின் தலைமைகளுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பிரதமரின் தமிழக வருகைக்கு முன்னதாக பாஜக பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு புலனாய்வு அமைப்பின் தோல்வியை தெளிவாக நிரூபிக்கிறது. புலனாய்வு அமைப்பு மொத்தமாக சீரமைக்கப்பட வேண்டும்” என்று, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர், தமிழக காவல்துறையை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
Sc Morcha Dist President of BJP Balachander was murdered on the eve of our PM’s visit to TN. This clearly proves the failure of TN’s intelligence system. From top to bottom, the intelligence system needs to be revamped.@PMOIndia @HMOIndia @AmitShah @CMOTamilnadu @tnpoliceoffl
— H Raja (@HRajaBJP) May 25, 2022
அவரின் மேலும் ஒரு பதிவில், “சென்னை பாஜக பட்டியலின பிரிவுத் தலைவர் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகம் இன்று மதவெறி, சமூக விரோதிகளின் கோரப்பிடியில்” என்று தெரிவித்துள்ளார்.