சென்னை: தமிழகத்தில் ரூ.12,413 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
ஹைதராபாத்தில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து 5.15 மணிக்கு புறப்படும் பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சாலை மார்க்கமாக 5.45 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ.12,413 கோடி மதிப்பிலான பல்வேறு நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுதவிர, சென்னை பெரும்பாக்கத்தில் பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.116 கோடியில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். ரயில்வே துறை சார்பில், ரூ.2,900 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் சீரமைப்பு பணி, தாம்பரம் – செங்கல்பட்டு 3-வது வழித்தடம் தொடக்கம், மதுரை – தேனி அகல ரயில்பாதை திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். இந்த விழா 7 மணிக்கு நிறைவடைகிறது.
பின்னர், நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து 7.05-க்கு புறப்பட்டு விமான நிலையத்துக்கு 7.35-க்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து 7.40-க்கு விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.