மிகவும் ருசியான மோதி லட்டு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். பூந்தி எதுவும் செய்யாமலே, சமைக்க தெரியாதவர்கள் கூட மிகவும் எளிதாக இதை செய்யலாம்.
ஒரு கிண்ணத்தில் 1½ கப் கடலை பருப்பு எடுக்கவும்.. 2-3 முறை தண்ணீர் ஊற்றி, ஸ்டார்ச் போகும் வரை, நன்கு கழுவவும். பிறகு, கழுவிய கடலைப் பருப்பில் தண்ணீர் ஊற்றி, சுமார் 2 மணி நேரத்துக்கு ஊறவைக்கவும்.
இப்போது கடலைப் பருப்பு நன்கு ஊறியிருக்கும். இதில் சுத்தமாக தண்ணீர் இல்லாதவாறு வடித்துக் கொள்ளவும். இப்போது ஊறவைத்த கடலைப் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும். ரொம்ப நைசாக இல்லாமல், கொரகொரப்பாக அரைக்கவும்.
இப்போது மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றவும். இதை எண்ணெயில் பக்கோடாவை பொரிப்பது போல, பொரித்தெடுக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்த பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் மெதுவாக போடவும். இதை ரொம்ப நேரம் பொரிக்க வேண்டாம். அதிக தீயில் வைத்து, ஒரு நிமிடம் பொரித்தாலே போதும். பருப்பு ஏற்கெனவே ஊறவைத்து அரைத்ததால் சீக்கிரமே வெந்துவிடும். ரொம்ப நேரம் பொரிய விட்டால் நிறம் மாறிவிடும். அதனால் லட்டுவில் கருகல் வாசனை வரும்.
எண்ணெய் வடிகட்டி, வெறொரு பாத்திரத்துக்கு மாற்றி, நன்கு ஆறவிடவும். இப்போது பொரித்த மாவு பார்ப்பதற்கு பக்கோடா போல இருக்கும். இந்த பொரி உருண்டைகளை மீண்டும் மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் 1 ½ கப் சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைய விடவும். அதில் விருப்பப்பட்டால் சிறிது ஃபுட் கலர், அதனுடன் வாசனைக்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கலாம். பாகு ஒரு கம்பி பதம் வரும்போது அடுப்பை அணைக்கவும்.
இப்போது அடுப்பை அணைத்து, பாகுவில் ஏற்கெனவே அரைத்த வைத்த கடலை பருப்பு பொடியை சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடான பிறகு, 2 ஸ்பூன் முந்திரி, 2 ஸ்பூன் கிஸ்மிஸ் பழம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை, மிதமான தீயில் வறுக்கவும். இதை லட்டு மாவில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இப்போது மாவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போது, லட்டு பிடிக்கவும். கையில் கொஞ்சமாக மாவு எடுத்து, எப்போதும் உருண்டை பிடிப்பது போல, லட்டு பிடிக்கலாம். இதை 10 நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம்.
பூந்தி செய்யாமல், சுவையான மோதி லட்டு இப்போது சாப்பிட ரெடி. இன்னைக்கே உங்க வீட்டுலயும் செய்ஞ்சு எல்லாரையும் அசத்துங்க!
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கீழே Indian Recipes Tamil யூடியூப் சேனலின் வீடியோவை பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“