பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வடமாநில வாலிபர்கள்- மீனவ கிராம மக்கள் மறியல்

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர்.

இரவு வரை தேடியும் சந்திரா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அது குறித்து கணவர் பாலு ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடகாடு பகுதிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் மாயமான சந்திராவை வடகாடு கடற்கரையை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்திரா அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.

அந்த 6 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் சந்திராவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர். சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர்களில் 3 பேர் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது. கடல் பாசி சேகரிப்பதற்காக சந்திரா சென்றபோது, அவரை இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கஞ்சா போதையில் வழிமறித்து தகராறு செய்திருக்கின்றனர்.

பின்பு அவரை வடகாடு காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பிறகு சந்திராவை அங்கு வைத்து அவரது சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.

சந்திராவை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முட்புதரில் அவரது உடலை போட்டு முகம் மற்றும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதையடுத்து வடமாநில வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் பணிபுரிந்து இறால் கம்பெனிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் மாயமான சந்திராவை தேடியபோது அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் வடமாநில வாலிபர்கள் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக வாலிபர்கள் 6 பேரும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வடமாநில வாலிபர்கள் 6 பேரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

இதனால் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்கள் யார்? என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. வாலிபர்கள் 6 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் சிகிச்சை முடிந்ததும் 6 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் கண்காணிப்பில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பவ இடத்திற்கு கலெக்டர் வரவேண்டும் மற்றும் தங்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.