பேரறிவாளனை விடுதலை செய்யும் இந்த அரசு, தவறே செய்யாத தனது தந்தையை சிறையிலேயே வைத்து விட்டதாக வீரப்பனின் அண்ணன் மகள் வேதனை தெரிவித்துள்ளார்.
சந்தன மரக்கடத்தல், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் என தமிழகத்தை பரபரப்பாக்கியவர் வீரப்பன்.
இவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கூறப்படும் மீசை மாதையன், 1987ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் வீரப்பனின் அண்ணன் ஆவார்.
அதனைத் தொடர்ந்து, தனது சகோதரரை கைது செய்த வனச்சரகர் சிதம்பரம் என்பவரை வீரப்பன் சுட்டுக்கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பில், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக 1996ஆம் ஆண்டு மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் இருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாதையன் மாற்றப்பட்டார்.
அதன் பின்னர் இருதய கோளாறு, சர்க்கரை நோய் மற்றும் வயது மூப்பு என அவதிப்பட்டு வந்த மாதையன், கடந்த 1ஆம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு மாதையனை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் அவரது வாழ்க்கை சிறையிலேயே முடிந்து விட்டது.
இந்த நிலையில் மாதையனின் மகள் ஜெயம்மாள் அளித்துள்ள பேட்டியில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்த அரசு, தவறே செய்யாத எனது தந்தையை 36 ஆண்டுகாலம் சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது.
கடைசிவரை எங்களோடு அவர் வராமலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இது எங்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
மாதையனின் இறுதி சடங்குக்கான வேலைகள் மேட்டூர் அணை கருமலைக்கூடல் பகுதியில் உள்ள அவரது மகள் ஜெயம்மாள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
அவரின் உடல் மேட்டூரை அடுத்த மூலக்காடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது மகன் மணி மற்றும் அவரது சகோதரர் வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்திலேயே இவரையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.