நீலகிரி மாவட்ட மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் படுகர் இன மக்கள் தங்களைப் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியின்போதும் கட்சி பேதமின்றி இந்த வாக்குறுதியும் தவறாமல் இடம் பிடிக்கும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியிலும் படுகர் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/IMG_20220524_WA0053__1_.jpg)
தமிழகத்தின் தற்போதைய வனத்துறை ராமச்சந்திரனும் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், படுகர்ளை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பார் என அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் நம்பிக்கையுடன் அணுகி வந்தனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர், படுகர்களை பழங்குடிகளாக அறிவிக்க சாத்தியக்கூறுகள் இல்லை என பேசியிருக்கிறார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஜெகதளா பகுதியில் நவீனப்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். அந்த விழாவில் பேசிய அமைச்சர், “கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் படுகர் இன மக்கள் முன்னேறி விட்டார்கள். எங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்குமாறு அரசியல் பொறுப்புகளில் இருந்த படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே சொல்லியிருக்கிறார்கள். அறியாமையின் காரணமாகவே பி.சி பட்டியலில் சேர்க்கை வைத்திருக்கிறார்கள். பழங்குடிகளாக இருந்தால் அரசின் இத்தனை சலுகைகள் கிடைக்கும் என்பது அப்போது தெரியாது. ஆனால், எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அது நடக்காது என சொல்லிவிட்டேன். ஒரு அமைச்சரே இப்படி ஒரு பதிலைச் சொல்லலாமா என நீங்கள் யோசிக்கலாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/IMG_20220524_WA0057.jpg)
முடியும் என்றால் முடியும் என சொல்லியிருப்பேன். பொய் சொல்லி ஏமாற்றும் பழக்கம் என்னிடம் கிடையாது. சிலபேர் எஸ்.டி பட்டியலில் சேர்க்கிறோம் என போராடி வருகிறார்கள். சமீபத்தில் ஊட்டிக்கு வருகைத் தந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவிடம் இது குறித்து மனு அளித்தனர். இதற்கு முன்பு அத்வானி இருக்கும் போதுகூட அவரிடமும் இதே போன்ற மனு கொடுக்கப்பட்டது. எங்கு மனு கொடுத்தாலும் மத்திய அரசின் கீழ் டெல்லியில் இருந்து குழு ஒன்றை அனுப்புவார்கள். படுகர் இன மக்களின் நிலையை அந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். இதற்கு முன்பு ஆய்வுக்கு வந்த குழு ஒன்று ஏற்கெனவே இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த மக்களின் உடை, வீடு, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சியைப் பார்த்து விட்டு படுகர்களை பழங்குடிகளாக்கும் முகாந்திரம் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர், முதல்வர் மட்டுமல்ல பிரதமரே இருந்தாலும் இந்தக் கமிட்டியை மீறி எதுவும் செய்ய முடியாது” என்றார்.