ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மூவரும் நீதிமன்ற விசாரணைக்காக கடலாடி, கமுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து வேன் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/IMG_20220518_WA0002.jpg)
கடலாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கமுதிக்கு புறப்பட்டு கோட்டைமேடு அருகே வந்தபோது வேனில் இருந்த பத்மேஷ்வரன் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஒருவரிடம் செல்போன் கொடுக்குமாறும், ஒருவரிடம் பேசவேண்டும் எனக் கேட்டுள்ளார். அந்த போலீஸ்காரர் செல்போன் தர மறுக்கவே, தனது கைவிலங்கால் வேனின் கண்ணாடியை உடைத்து, செல்போன் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வேனை அங்கேயே நிறுத்தி கமுதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கமுதி போலீஸார் பத்மேஷ்வரனை கண்டித்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் முத்திருள்பாண்டி கொடுத்த புகாரின்பேரில், கமுதி போலீஸார் பத்மேஷ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக் கைதி போலீஸிடம் தகராறு செய்து போலீஸ் வேன் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.