போபால்-மூன்று சக்கர சைக்கிளை ஓட்ட முடியாமல், முதுகு வலியால் மனைவி துன்பப்படுவதை பார்த்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர், 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய, ‘மொபெட்’ வாங்கிஉள்ளார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சிசிந்த்வாராவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் சாஹு. உடல் ஊனமுற்ற இவர், தன் மனைவி முன்னியுடன் சேர்ந்து, சிசிந்த்வாராவில் பிச்சை எடுத்து வருகிறார்.சாஹுவால் நடக்க முடியாது என்பதால், மூன்று சக்கர சைக்கிளில் அவரை உட்கார வைத்து, அவருடைய மனைவி ஓட்டிச் செல்வார். இவ்வாறு நகரின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் பிச்சை எடுத்து வந்தனர்.
கிடைத்த இடத்தில் படுத்து துாங்குவர்.இவ்வாறு நீண்ட காலமாக மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியதால், முன்னிக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. மூன்று சக்கர சைக்கிளை ஓட்டுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து, பணத்தை சேமித்து வைத்து, புதிய மொபெட் ஒன்றை, 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார், சாஹு.
அவரால் நடக்க முடியாது என்பதால், அதற்கு ஏற்ப அந்த மொ பெட், மூன்று சக்கரங்கள் பொருத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளது.இப்போது சாஹு தன் மனைவியை பின் சீட்டில் உட்கார வைத்து பிச்சை எடுக்க செல்லும், ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மனைவி மீதான சாஹுவின் அன்பு, அக்கறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement