சென்னை: மாணவி சிந்துவின் தந்தைக்கு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்திற்குள் தேநீர் கடை வைத்து வியாபாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி சிந்து உடல் நலமில்லாதபோதும் 108 ஆம்புலன்ஸிலேயே சென்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். இதனை அறிந்த முதல்வர், சிந்துவிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியதின் பேரில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழுவினால் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது
இந்நிலையில், முதல்வரை சந்திக்க ஆசை என சிந்து, அமைச்சர் சுப்ரமணியனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று மருத்துவமனைக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், சிந்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சிந்துவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், தொடர்ந்து சிந்துவிற்கு இன்னும் ஒரு வருடம் வரை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கருதி அவரது தந்தைக்கு மருத்துவமனை வளாகத்திற்குள் தேநீர் கடை வைத்து வியாபாரம் மேற்கொள்ள ஒரு வருடத்திற்கு அனுமதி அளித்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.