சென்னை: “நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடுள்ள அறிக்கையில், “வீரப்பன் அண்ணன் மாதையன் 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசியாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நலம் மோசம் அடைந்து சிறையிலேயே உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.
20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நீண்டகால சிறைவாசிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களது முன் விடுதலை குறித்து பரிந்துரை செய்வதற்காக தமிழக அரசு, நீதியரசர் ஆதிநாதன் குழு அமைத்தது.
அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் பெறப்பட்டு நீண்டகால வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை அடைய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதையனுக்கு ஏற்பட்ட கதி ஏனைய நீண்டகால சிறைவாசிகள் யாருக்கும் ஏற்பட விடக்கூடாது
தமிழக அரசு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் உள்ளதை பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதைப் பயன்படுத்தி நீதியரசர் ஆதிநாதன் குழுவிடமிருந்து விரைவாக அறிக்கைப் பெற்று விடுதலை செய்வதற்கான வழிவகை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.