ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக வடமாநில இளைஞர்கள் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் பெரும் பதற்றம் நிலவியது.
ராமேசுவரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், வடகாடு கடலோரப் பகுதியில் கடல்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். செவ்வாய்கிழமை அதிகாலை வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்கச் சென்றவர் மாலை வரை வீடு திரும்பாததால் அவரது உறவினர் கடலோரப் பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர்.
இருட்டிய பின்னரும் அவர் குறித்து தகவல் எதுவும் தெரியாததால் அவருடைய கணவர், ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் செவ்வாய்கிழமை இரவு வடகாடு காட்டு பகுதியில், பாதியளவிலான ஆடையுடன் முகம் எரிந்து உயிரிழந்த நிலையில் அவரது உடலை போலீஸார் கண்டெடுத்தனர்.
இதையடுத்து, அவருடன் கடல்பாசி சேகரிக்கும் மீனவ பெண்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, திங்கட்கிழமை அருகிலுள்ள இறால் பண்ணையில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் சிலர், அந்தப் பெண்ணை கேலி செய்ததாகவும், அவர்களுடன் அந்தப் பெண் வாக்குவாத்துடன் சண்டை போட்டதாகவும் தெரிவித்தனர்.
அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்களும், வடகாடு மீனவ கிராம மக்களும் செவ்வாய்கிழமை நள்ளிரவில் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி அங்குள்ள ஒரு கட்டிடத்தை தீ வைத்து கொளுத்தினர். மேலும், இறால் பண்ணையிலிருந்த 6 வட மாநில இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அவர்களிடமிருந்து வட மாநில இளைஞர்களைக் காப்பாற்ற போலீஸார் ஒரு அறையில் போட்டு 6 பேரையும் பூட்டினர்.
அதேவேளை செவ்வாய்கிழமை நள்ளிரவு பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது வடகாடு கிராம மீனவ மக்கள் திரண்டு கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ராமநாபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை கண்டுபிடித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்து செல்ல மீனவர் அனுமதித்தனர். மேலும் 6 வடமாநில இளைஞர்களையும் பூட்டிய அறையிலிருந்து மீட்டு எஸ்.பி. கார்த்திக் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
மீன்வர்கள் சாலை மறியல்: மறுநாள் இன்று காலை 8.15 மணியளவில் கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும், ராமேசுவரத்தில் இயங்கும் இறால் பண்னைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை துவங்கினர். இதனால் ராமேசுவரம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த சாலை மறியலின்போது உயிரிந்த பெண்ணின் இரண்டாவது மகள் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை பெண் போலீசார் தடுத்து நிறுத்தி மயங்கி விழுந்தவரை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனர்.
அதன் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தை தொடர்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையிலான போலீஸார் போராட்டக்காரர்களை கலைத்தனர். சுமார் 5.30 மணி நேரம் கழித்து மதியம் 1.45 மணியளவில் ராமேசுவரத்திலிருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன.
சந்தேகத்தின் அடிப்படையில் இறால் பண்ணையில் வேலை செய்த 6 வடமாநில இளைஞர்களையும் கைது செய்துள்ள போலீஸார், அந்தப் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
மேலும், ராமேசுவரம் வடகாடு பகுதியில் ஹாஜத்து பீவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த இறால் பண்ணை அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்தாகக் கூறி புதன்கிழமை பிற்பகல் அந்த இறால் பண்ணைக்கு மீன்வளத்துறையினர் சீல் வைத்தனர்.