லக்னோவுக்கு லக்நோ.. பெங்களூரு அணியுடன் தோற்று வெளியேறியது!| Dinamalar

கோல்கட்டா: ‘எலிமினேட்டர்’ போட்டியில் அசத்திய பெங்களூரு அணி 14 ரன்னில் வெற்றி பெற்று, லக்னோ அணியை வெளியேற்றியது. ரஜத் படிதர் சதம் விளாசி அசத்தினார்.

இந்தியாவில் 15வது ‘டி-20’ கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணி, பைனலுக்கு முன்னேறியது. நேற்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘எலிமினேட்டர்’ போட்டி நடந்தது. புள்ளிப்பட்டியலில் 3, 4 வது இடம் பிடித்த லோகேஷ் ராகுலின் லக்னோ, டுபிளசியின் பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராகுல், பீல்டிங் தேர்வு செய்தார்.

படிதர் ‘வேகம்’


லீக் சுற்றில் லக்னோவை வீழ்த்திய நம்பிக்கையில் பெங்களூரு அணி களமிறங்கியது. கேப்டன் டுபிளசி, கோஹ்லி ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. மொசின் கான் வீசிய முதல் ஓவரில் ‘டக்’ அவுட்டானார் டுபிளசி. கோஹ்லியுடன் இணைந்தார் ரஜத் படிதர். அவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விளாசிய படிதர், குர்னால் பாண்ட்யாவின் 2வது ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என தொடர்ந்து விளாச, 20 ரன் கிடைத்தன. ‘பவர் பிளே’ ஓவர் முடிவில் (முதல் 6) பெங்களூரு அணி 52/1 ரன் எடுத்தது.

கோஹ்லி ‘அவுட்’


மறுபக்கம் ஒருநாள் போட்டிபோல, பந்துகளை வீணடித்துக் கொண்டிருந்த கோஹ்லி (25 ரன், 24 பந்து), அவேஷ் கான் வீசிய ‘பவுன்சரை’ அடித்து வீணாக அவுட்டானார். குர்னால் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட மேக்ஸ்வெல் (9), லீவிசிடம் ‘பிடி’ கொடுத்தார். பெங்களூரு அணி 12 ஓவரில் 106/3 ரன் எடுத்தது. லாம்ரர் (14), பிஷ்னோய் சுழலில் சிக்கினார்.

நழுவிய ‘கேட்ச்’


படிதர், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். 2 ரன்னில் கார்த்திக் கொடுத்த ‘கேட்ச்சை’ ராகுல் கோட்டை விட்டார். 72 ரன்னில் படிதர் கொடுத்த ‘கேட்ச்சை’ தீபக் ஹூடா நழுவவிட்டார். இந்த வாய்ப்பை இருவரும் நன்றாக பிடித்துக் கொண்டனர். பிஷ்னோய் வீசிய 16 வது ஓவரில் படிதர், அடுத்தடுத்த பந்தில் 6, 4, 6 என அடித்து மிரட்ட, 27 ரன் எடுக்கப்பட்டன.

‘சூப்பர்’ சதம்


படிதர் 93 ரன்னில் கொடுத்த மற்றொரு ‘கேட்ச்சை’ மனன் வோரா கோட்டை விட்டார். அடுத்த பந்தில் சிக்சர் அடித்த படிதர், 49 வது பந்தில் ‘டி-20’ அரங்கில் தனது முதல் சதம் கடந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது. கடைசி 41 பந்தில் 92 ரன் சேர்த்த படிதர் (112), கார்த்திக் (37) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.

ராகுல் அரைசதம்


கடின இலக்கைத் துரத்திய லக்னோ அணியின் குயின்டன் டி காக் (6), மனன் வோரா (19) நிலைக்கவில்லை. ராகுல், 43வது பந்தில் அரைசதம் கடந்தார். தீபக் ஹூடா (45) போல்டானார். லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்தில் 65 ரன் தேவைப்பட்டன. சிராஜ் பந்தில் சிக்சர் அடித்த ராகுல், ஹசரங்கா ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி என விளாச, வெற்றியை நெருங்கியது லக்னோ. இந்நிலையில் ஸ்டாய்னிஸ் (9), ராகுல் (79), குர்னால் பாண்ட்யா (0) அடுத்தடுத்து அவுட்டாக, பெங்களூரு பக்கம் வெற்றி திரும்பியது.

latest tamil news

லக்னோ வெற்றிக்கு கடைசி ஓவரில் 24 ரன் தேவைப்பட்டன. ஹர்ஷல் வீசிய இந்த ஓவரில் 9 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

ராஜஸ்தானுடன் மோதல்


‘எலிமினேட்டர்’ போட்டியில் வென்ற பெங்களூரு அணி, நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் ராஜஸ்தானுடன் மோதும். இதில் வெல்லும் அணி, மே 29ல் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலுக்கு முன்னேறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.