வருடம் முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே இருந்தால், நீங்கள் எப்படி உங்கள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்று சசிகலா திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை; ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. ஒரு கட்சியின் இயக்கத்தின் தலைவர் என்றால் தொண்டர்களால் முடிவு செய்து ஏற்றுக்கொள்கிற ஒரு தலைவராக இருந்தால்தான், அந்த தலைமையின் கீழ் எல்லோரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். இப்ப அந்த மாதிரி நிலைமை அங்கே இல்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த மாதிரி நிகழ்வுகள்” என்று கூறினார்.
மாவட்ட வாரியாக பயணம் செய்து வருகிறீர்கள் அடுத்த கட்ட நிலைப்பாடு என்ன?
சசிகலா: “அங்கே தொண்டர்களையும் பார்க்கிறேன். பொதுமக்களும் அவர்களுடைய குறைகளை எல்லாம் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால், திமுக ஆட்சி வந்து வருடம் ஆகியிருக்கிறது. ஆனால், அதே சமயம், அவர்கள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அதைப் பார்க்கும்போது நாங்கள் அம்மாவுடைய ஆட்சியை விரைவில் அமைப்போம் என்று கூறினேன். அதற்கு முதல்படியே அந்த மக்களுடைய கருத்துதான்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் சொல்லியிருக்கிறீர்கள். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இதுவரை மூத்த தலைவர்கள் யாரும் வந்து உங்களை சந்திக்கவில்லை. எதன் அடிப்படையில், அதிமுகவை இணைப்பதற்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறீர்கள்?
நிச்சயமாக, எல்லாமே தொண்டர்களின் கைகளில்தான் இருகிறது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் வெற்றி பெறும் அந்த அடிப்படையில்தான் நான் சொல்கிறேன்.
அதிமுகவின் பொதுக்குழு சீக்கிரம் கூட்டபடும் என்று சொல்லியிருக்கிறார்கள்?
என்ன செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால், தொண்டர்கள் அவர்களுடன் இல்லை.
அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாருமே உங்களுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்களே?
எல்லாரும் பேசவில்லை. ஒருசிலர் பேசுகிறார்கள். அவர்கள், ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்பதற்காகக்கூட பேசலாம் இல்லையா?
அவர்கள் பேசும்போது, உறுதியாக என்ன சொல்கிறார்கள் என்றால், உங்களை அதிமுகவில் இணைக்கவே முடியாது என்று சொல்கிறார்களே?
இவர்கள் சொல்வதற்கு யாரு? எங்கள் தலைவர் (எம்.ஜி.ஆர்) ஆரம்பித்த இயக்கத்தில், தொண்டர்கள் கைகளில்தான் யார் தலைவராக இருக்க வேண்டும் வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தலைவர் சொல்லியிருக்கிறார். அதன்படி பார்க்கும்போது தொண்டர்கள்தான் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்.
திமுக ஆட்சியில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது?
பல நேரங்களில் என்று சொல்கிறீர்கள். ஆனால், பொதுவாக மக்களுடையக் கருத்தேன். அவர்கள் எதிலுமே எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றுதான் சொல்வேன். அதனால், நீங்கள் வரவேண்டும். உங்களைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதுதான் பொதுமக்களுடைய கருத்தாகவும் இருக்கிறது.
நேற்றைய தினம் பாஜக தலைவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாஜகவில் உள்ள ஒரு தலைவர் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நிறைய இடங்களில் மிகப் பெரிய அளவில் கொலைக்குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம், நிர்வாகயின்மைதான் காரணம். நிர்வாகம் இவர்கள் சரியாக செய்யவில்லை. அதிலும் குறிப்பாக, போலீஸ் துறையை வைத்துள்ள முதலமைச்சர். போலீஸ் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
அதிமுகவை மீட்டெடுப்பதற்காக நீங்கள் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் பின்னடைவை ஏற்பட்டிருக்கிறதே?
பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள். இது என்ன சுப்ரிம் கோர்ட் முடிவா? அடுத்த கட்ட நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.
அதிமுக தலைவர்கள் உங்களிடம் இன்னும் தொடர்பில் இருக்கிறார்களா? பேசுகிறார்களா?
தொடர்பில் இருக்கிறார்கள். இதுக்கு மேல வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொல்லாததற்கு எந்த காரணமும் இல்லை.
மேட்டூர் அணை மே மாதமே திறந்திருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அதாவது மேட்டூர் அணையில் தண்ணீர் வந்திருக்கிறது. அம்மா (ஜெயலலிதா) ஒருமுறை திறந்தார்கள். இப்போது வந்திருக்கிற திமுக அரசாங்கம் நாம் திறந்துவிடவேண்டும் என்று சொல்லிவிட்டு போய் திறந்திருக்கிறார்கள். என்னைக்கேட்டால், அடுத்த மாதம் 20ம் தேதி வரைக்கும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நிகழ்ச்சி நிரல் போட்டிருக்கிறார்கள். அங்கே உள்ள கடைமடை பகுதிகளுக்கு தூர்வாரும் பணிகள், ஷட்டர்களை புதுப்பிக்கும் பணிகள் எல்லாம் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நிரல் படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு இடையில், அரசாங்கத்தில் ஒரு பக்கம் முதலமைச்சரே போய், தண்ணீரை திறந்துவிடுகிறார். அப்போது இந்த தூர் வாரும் பணி முழுமையாக நடைபெறுமா? தண்ணீர் திறந்துவிட்டால் எப்படி நடைபெறும். அது நடைபெற முடியாது. ஆனால், அதற்கு உள்ள அமைச்சர் துரைமுருகன் அண்ணன் என்ன சொல்கிறார். தூர்வாரும் பணிகள் எல்லாம் நல்ல படி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். நீங்களே (ஊடகங்கள்) எதிர்பார்க்காத ஒரு விஷயம் தண்ணீர் வந்திருக்கிறது என்கிறீர்கள். முதலமைச்சர் திறந்துவிடுகிறார். அப்படியென்றால், திட்டப்பணிக்ள் எப்படி முடிந்திருக்கும். அதனால், தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறவில்லை என்பதே என்னுடைய குற்றச்சாட்டு.
வரக்கூடிய காலங்களில், அதிமுகவில் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்பு உங்கள் தலைமையில் இருக்கிறதா? அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
அந்த நம்பிக்கை 100 சதவீதம் இருக்கிறது.
அதிமுகவில் யாரை ராஜ்ய சபா பதவிக்கு தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும்?
என்னைப் பொறுத்தவரை, அம்மா (ஜெயலலிதா) எப்படி செயல்பட்டார்கள், சாதாரண் ஒரு தொண்டராக இருந்தாலும்கூட அவர்களை ராஜ்ய சபாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நீங்கள் கேள்விப்படாதவர் கூட பதவிக்கு வந்திருக்கிறார்கள். அதுமாதிரி இப்போதும் நடைபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
அதிமுகவில் சாதி ரீதியாக வாய்ப்பு கொடுப்பதாக ஒரு பிரச்னை சொல்கிறார்களே?
அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் சாதி, மதம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சியாத்தான் எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். நடத்திக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து (அம்மாவும்) அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது ஒரு சிலர் அந்த மாதிரி மனப்பான்மையோடு இருக்கிறார்கள். அப்படி தலைமையாக இருந்து யாருமே செயல்பட முடியாது. அது எந்த இடத்தில் இருந்தாலும் சரி, சாதி என்கிற முறையில் போனால், அந்த இடத்தில் ஒரு நியாயத்தை நீங்கள் பார்க்கவே முடியாது. அது இல்லாமல் செயல்படுவதுதான் அதிமுகவின் வழி.
உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் எப்போதுமே மரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அதற்கு பிறகு உங்களை தொடர்புகொண்டு ஏதாவது பேசினாரா?
அதை நான் எப்படி இவ்வளவு பேர் மத்தியில் சொல்ல முடியும்.
இன்னொன்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரஸ் ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை. கேள்வி கேட்கும்போது, ஒரு சாரார் என்ற செய்கிறீர்கள்? எங்கள் கட்சியைப் பற்றியே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அது உட்கட்சி விஷயம், ஒரு கட்சி விவகாரம். இவ்வளவு தொலைக்காட்சி சேனல் வந்து பேட்டி எடுக்கிறீர்கள். எல்லாருடைய வேலை எதுவாக இருக்க வேண்டும். அரசாங்கம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறது? அதில் ஏதாவது தவறுகள் இருக்கிறதா? அதை ஏன் சுட்டிக்காட்டமாட்டேங்கிறீர்கள். அதற்கு உண்டான கேள்விகளை எல்லாம் நீங்கள் கேட்கிறதே இல்லை. அது எதனால், பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது பொது பிரச்னை. அதை மீறி எவ்வளவோ தவறுகள் நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றி ஏன் யாருமே பேசமாட்டேங்கிறீங்க. நீங்கள் யாருமே கேட்கிறதில்லை.
பிரஸ்களினுடைய வாய்கள் அடைக்கப்பட்டிருக்கிறதா? என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், அதே சமயம், பிரஸ் வாயை வேண்டுமானால், மூடிவைக்கலாம். அதிகாரத்தை வைத்து மூடி வைக்கலாம். பயத்தை கொடுத்து செய்யலாம். அது எதுவுமே சரியாகிவிடும் என்று நினைத்தால் அவர்கள் போடுவது தப்பு கணக்கு. காரணம், பொதுமக்கள் இருக்கிறார்கள். இந்த பிரஸ் வந்து நாளைக்கு ஓட்டு போடப் போறது இல்லை. பொதுமக்கள்தான் போடப்போறாங்க. அதனால், பொதுமக்களினுடைய மனதறிந்து பிரஸ் நடந்துகொண்டால்தான் உங்களுக்கும் நல்லது. உங்கள் நிர்வாகத்துக்கும் நல்லது.
பிரதமர் மோடி நாளைக்கு தமிழ்நாடு வருகிறார்? மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு நிறைய கோரிக்கைகள் இருக்கிறது?
பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது. வரலாம். எந்த ஆட்சி நடந்தாலும் மேலே மத்திய அரசு இருக்கிறது. ஒரு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. கேட்டால் 560 திட்டங்கள் செய்துவிட்டதாக சொல்கிறீர்கள். ஆனால், மக்கள் சொல்லவில்லை. மக்கள் மனம் நிறைந்துசொன்னால்தான், நாம் அதை எடுத்துக்கொள்ள முடியும். அமைச்சர்கள் ஒரு பக்கம் சொல்வது முதலமைச்சர் ஒரு பக்கம் சொல்வது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்தியில் ஒரு அரசாங்கம் இருக்கிறது என்றால், நீங்கள் தேர்தல் சமயத்தில் சண்டை போட்டுக்கொள்ளுங்கள். எதிர்க்கட்சியைப் பேசலாம். அதெல்லாம், தேர்தலின்போது 3 மாத காலம் நடக்கலாம். நீங்கள் வருஷம் முழுவதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்களுடைய திட்டங்களை எப்படி செயல்படுத்துவீர்கள். நீங்கள் பெரியவர்களா நாங்கள் பெரியவர்களா என்று நினைப்பதை விட்டுவிடவேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“