சென்னை: வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும். 26-ம்தேதி (நாளை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னை நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, தெற்கு கேரளா, தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4 இடங்களில் 104 டிகிரி
இதற்கிடையே, சென்னை மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சை, திருச்சி, வேலூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரம், நாமக்கல், ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.