சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 26-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டி இருக்கும்.
25-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 9 செமீ, அரியலூரில் 6 செமீ, பெரம்பலூர் செட்டிகுளத்தில் 4 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம், மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.