PM Modi visits Chennai on May 26 and attend inaugural function with CM Stalin: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி மே 26ல் சென்னை வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி மே 26 ஆம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
இதேபோல் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அன்றிரவே புறப்பட்டு டெல்லிக்கு செல்கிறார் பிரதமர் மோடி. சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: அமைச்சர்கள் வடம்பிடித்து வெள்ளோட்டம்… 300 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்திற்கு தயாராகும் கோயில்!
இதனிடையே, பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சென்னையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், மே 26 ல் இருவரும் ஒரே மேடையில் இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பங்கேற்க உள்ளனர்.