Students and Teachers say SSLC Maths exam difficult: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாகவும், பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும் மாணவர்கள் அதிர்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று (மே 24) கணிதப் பாடத் தேர்வு நடந்தது. இந்தநிலையில், இந்த தேர்வு கடினமாக இருந்ததாகவும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் இடம்பெற்றுள்ளதாகவும் மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.
இதனால், சில மாணவர்களால் தேர்ச்சி பெறுவதே கடினமாக இருக்கும் என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் வரைபடம் போன்றவை தவிர்த்து மற்ற அனைத்து கேள்விகளும் மிக கடினமாக இருந்துள்ளன. 5 மதிப்பெண் வினாக்கள் பகுதியில் 14 கேள்விகள் தரப்பட்டு, பத்து கேள்விகளுக்கு விடை எழுதவேண்டும் என்ற நிலையில், அதில் 42 வது கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் 14 கேள்விகளில், 5 கேள்விகள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய பகுதிகளில் 14 கேள்விகள் தரப்பட்டு, 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்ற நிலையில், இதிலும் 5 கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும், மீதமிருந்த 10 கேள்விகளும் எழுத முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு கேள்வி நடத்தப்படாத பாடத்திலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக, பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாததால், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டன. அதன்படி குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேள்வி கேட்கப்படாமல், நீக்கம் செய்யப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், 28 வது கேள்வி, பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருப்பதும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதைய கேள்வித்தாளைப் பொறுத்தவரை, கணிதம் நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும் என்றும் கணிதத்தில் தேர்ச்சி மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறலாம் என்ற நிலையில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்
இதனிடையே கல்வியாளர்கள் சிலர், யாருக்குத் தேர்வு? மாணவருக்கா? ஆசிரியருக்கா? வினாத்தாள் குழந்தைகளை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதா? அல்லது ஆசிரியர்கள் மீது தேர்ச்சி சதவீதம் இல்லை என்று குற்றம் சாட்டத் தயாரிக்கப்பட்டதா? சாதாரணமாகவே கணக்குப் பாடத்தைப் பார்த்து பயப்படும் குழந்தைகளை இன்று கதிகலங்க வைத்திருக்கிறது கல்வித் துறையின் புத்திசாலித்தனம்.
2 வருஷமா புத்தகத்தையே பார்க்காத குழந்தைகளை 3 மாசத்துல மொத்த 8 Chapters, 340 பக்கங்களை நடத்தி கணக்குகளைப் போட வைத்து பொதுத் தேர்வுக்குத் தயாரிப்பது உண்மையில் சாத்தியமா? (8 ஆம் வகுப்பை சரியா படிக்காத, 9 ஆம் வகுப்பையே படிக்காத குழந்தைகள் இவர்கள்) சாத்தியப் படுத்தி ஒரு வழியா குழந்தைகளை மனதளவில் தயாரித்து தேர்வுக்கு அனுப்பினா, குழந்தைகள் கேள்வித் தாளைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழாத குறைதான். தேர்வு என்றாலே வடிகட்டுதல் தான். ஆனால், கணக்குத் தேர்வு 10 ஆம் வகுப்பிலேயே வடிகட்ட இப்படி ஒரு வினாத்தாள் தேர்வா? என கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக என்ன முடிவெடுக்கப் போகிறது என மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.