சென்னை: பாமகவை கடந்த 25 ஆண்டு காலமாக அருமையாக வழிநடத்திய ஜி.கே.மணி, ஓய்வறியா உழைப்பாளி என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார்.
பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, கட்சி சார்பில் நேற்று அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இந்த விழா நடந்தது.
இதில் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா, மாநில தேர்தல் பணிக் குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்க மாநிலச் செயலாளரும், செங்கல்பட்டு முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் கி.ஆறுமுகம் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ராமதாஸின் மனைவி சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர், ஜி.கே.மணி குடும்பத்தினர் பங்கேற்றனர்.
விழாவில் பதக்கம், மாலை அணிவித்து ஜி.கே.மணி கவுரவிக்கப்பட்டார். அவரை வாழ்த்தியும், பாராட்டியும் அனைவரும் பேசினர். அவரை வாழ்த்தி ராமதாஸ் கவிதை வாசித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
ராமதாஸ்: 25 ஆண்டுகாலம் கட்சியை ஜி.கே.மணியிடம் கொடுத்தேன். மிக அருமையாக வழிநடத்தியுள்ளார். இரவு 1 மணி ஆனாலும் டைரியில் குறித்து, அதை உடனடியாக செய்வார். அவருக்கு ‘ஓய்வறியா உழைப்பாளி’ என்று பெயர் வைத்துள்ளோம். ஜி.கே.மணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அன்புமணி: ஐ.நா. சபையில் முதல்முறையாக வேஷ்டியுடன் அமர்ந்தவர் ஜி.கே.மணி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியர் பணியாற்றிய பின்னர், பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றியவர். அவர் ஆற்றிய சேவைகளை அறிந்து, கட்சியில் இணைத்துக் கொள்ள எம்ஜிஆர் அழைப்பு விடுத்தார். ஆனால் அதை மறுத்துவிட்டார். மிக நேர்மையான முறையில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, உறங்காமல் உழைப்பவர்.
ஜி.கே.மணி: 25 ஆண்டு காலம் தலைவர் பணியில் ராமதாஸின் மனசாட்சியாக செயல்பட்டதே எனக்கு பெருமையாக உள்ளது. ராமதாஸை சாதி தலைவர் என்கின்றனர். ஆனால், தலித் தலைவர்கள் ராமதாஸை பாராட்டாமல் இருந்ததில்லை. அவர் மக்களை நேசிக்கும் தலைவர். வன்னியர்களுக்காக ஓயாது போராடிய தலைவர். பாளையங்கோட்டை தவிர தமிழகத்தின் அனைத்து சிறைகளுக்கும் சென்றவர். நமது இளைஞர் அணித் தலைவரான அன்புமணிக்கு தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவையே ஆட்சி செய்யக்கூடிய தகுதி, திறமை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மே 28-ல் பாமக தலைவராகிறார் அன்புமணி
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி சென்னை அடுத்த திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண அரங்கில் நடக்க உள்ளது. தற்போது கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருக்கும் அன்புமணி, இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளார். தற்போது கட்சியின் தலைவராக உள்ள ஜி.கே.மணிக்கு ஆலோசகர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை பாமக தலைவராக ஜி.கே.மணி இருப்பார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.