மொபைல் போன் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 356 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன் மூலம் 80 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலகம் முழுவதும் நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் இருந்த போதிலும் தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
இந்த நிலையில் வரும் 2026ஆம் ஆண்டிற்குள் 356 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப் போவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த முதலீட்டை சிப் மேக்கிங் மற்றும் பயோ பார்மாசூட்டிக்கல்ஸ் போன்ற துறைகளில் முதலீடு செய்யவும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த இரண்டு துறைகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையவும் சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய முதலீடு
356 பில்லியன் அமெரிக்க டாலர்களில் பெரும்பாலும், அதாவது 285 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தென்கொரியாவில் தான் முதலீடு செய்யப்படும் என தெரிகிறது. மீதமுள்ள தொகை மட்டுமே மற்ற நாடுகளுக்கு ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்பட ஒரு சில நாடுகளிலும், இந்தியாவிலும் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள்
இந்த புதிய முதலீடு காரணமாக உலகம் முழுவதும் 80 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், சுமார் 16,000 புதிய பதவிகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக 2023-ம் ஆண்டுக்குள் 40,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அதன் பிறகு 2026-ம் ஆண்டுக்குள் மேலும் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எலக்ட்ரானிக் பிரிவு
சாம்சங் நிறுவனம் எலக்ட்ரானிக் பிரிவிற்கு மிகவும் பிரபலமானது என்பதும் குறிப்பாக சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சி மாடல்கள் உலகின் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் அதிக முதலீடு செய்யாமல் மெமரி சிப் மற்றும் பார்மாசூட்டிக்கல்ஸ் துறையில்தான் சாம்சங் அதிகமாக முதலீடு செய்ய தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அதிபர் வருகை
ஆனால் அதே நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டவுடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மேலும் சில பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரியா நாட்டில் உள்ள சாம்சங் தொழிற்சாலைக்கு வருகை தந்த ஒரு சில நாட்களில், சாம்சங் நிறுவனம் இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samsung commits to $356 billion of investment for 80000 jobs
Samsung commits to $356 billion of investment for 80000 jobs | 356 பில்லியன் புதிய முதலீடு, 80,000 புதிய வேலைவாய்ப்புகள்: சாம்சங் நிறுவனத்தின் மெகா திட்டம்!