குழந்தைகளுக்கு தினமும் சீஸ் கொடுக்கலாமா? சீஸ் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்குமா? பனீர் கொடுப்பது நல்லதா?
நவீன் (விகடன் இணையதளத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
சீஸ் மற்றும் பனீர் இரண்டிலுமே ஆற்றல், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் பி12, தாதுச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பதப்படுத்தப்பட்ட சீஸை தினமும் குழந்தைகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்வாகுக்கேற்ற பரிந்துரையின் அளவில் கொடுக்கலாம்.
பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே கொடுக்கப்படும்போது அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், எடை அதிகரிப்பதையும் தவிர்க்கும். ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளுக்கு மருத்துவர் அல்லது டயட்டீஷியனின் ஆலோசனையோடு அளவை சற்று அதிகரித்துக் கொடுக்கலாம்.
பனீரைவிடவும் சீஸில் கொழுப்பும் உப்புச்சத்தும் அதிகம் என்பதால் அதை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. பனீரோ, சீஸோ… பதப்படுத்தப்படாத பால் உணவுகள் எதையும் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கவே கூடாது.