சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், பளிச்சென மனதில் ஒட்டிக்கொள்பவர் சம்பத் ராம். சமீபத்தில் கமலின் ‘விக்ரம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
” நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். ‘கபாலி’க்கு அப்புறம் பெரிய படமா ‘விக்ரம்’ வருது. இந்த இடைப்பட்ட காலத்துல கொரோனாவினால் லாக்டௌனும் வந்ததால, என்னைப் பார்க்கறவங்க எல்லாரும், `என்ன சார் படமே பண்ணலை’ன்னு கேட்பாங்க. பெரிய படங்கள்ல நடிச்சாதான் ஜனங்க நம்புவாங்க போலன்னு தோணுச்சு. ஒருநாள் கமல் சார் ஆபீஸ் போய் பார்த்தேன். ‘கண்டிப்பா கூப்பிடுறேன்’னு சொன்னாங்க. அதேபோல கூப்பிட்டு, ‘படத்துல விஜய்சேதுபதிக்கு ஏழெட்டு அண்ணன் தம்பிகள் இருக்காங்க. அதுல ஒரு அண்ணனா நடிக்கணும், பண்றீங்களா?”ன்னு கேட்டாங்க. கமல் சார் படமாச்சே, உடனே பண்றேன்னு சொல்லிட்டேன். ‘வசூல்ராஜா’வுக்குப் பிறகு இப்ப ‘விக்ரம்’ல வந்திருக்கேன்.
இந்தப் படத்துல விஜய்சேதுபதியோட காம்பினேஷன்கள்லதான் நிறைய நாள் நடிச்சேன். கமல் சாரோட ஃபைட் சீக்குவென்ஸ்ல நடிச்சிருக்கேன். கமல் சாரின் எனர்ஜி ஆச்சரியமா இருந்துச்சு. ஸ்பாட்டுல எப்பவும் பெரிய கூட்டம் இருக்கும். டெக்னாலஜி விஷயங்களும் மிரட்டலா இருக்கும். அதிலும் கேமராமேன், ஆர்ட் டைரக்டர்களின் ஒர்க் ஆச்சரியமூட்டும். கலை இயக்குநர் சதீஷ் ஒரு பெரிய தொழிற்சாலையை நுணுக்கமா கவனிச்சு செட் போட்டிருக்கார். நான் நிறைய படங்கள்ல நடிச்சிருந்தாலும், கேமராவைப் பொறுத்தவரை புதுப்புது டெக்னாலஜிகள் பயன்படுத்துறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். கமல் சார் காம்பினேஷன் ஃபைட்டை ரெண்டு மணி நேரம் கம்போஸ் பண்ணினாங்க. போல்ட்னு ஒரு புதுவகை கேமராவைப் பயன்படுத்தியிருக்காங்க. கமல்சார் படம்னாலே புதுமையா எதாவது இருந்துட்டே இருக்கும் என்பதற்கு இந்தப்படமும் உதாரணம்.
விஜய்சேதுபதியோட ‘விடுதலை’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு ரெண்டு படங்கள் சேர்ந்து நடிச்சிருக்கேன். அதுல முதல்ல ‘விக்ரம்’தான் ரிலீஸ் ஆகுது. ‘யாதும் ஊரே’ல அவரோட காம்பினேஷன் கிடையாதுனாலும், டப்பிங்ல சேது சாரும் இருந்தார். என்னைப் பார்த்துட்டு ‘நீங்க இண்டஸ்ட்ரில ரொம்ப நாளா இருக்கீங்க, இன்னும் உங்களுக்கு சரியான இடம் அமையலண்ணே’ன்னு சொன்னார். அப்புறம் ‘விடுதலை’ல கூப்பிட்டார். அந்த ஸ்பாட்டுல அன்பா பேசினார். சின்ன ஆர்ட்டிஸ்ட் பெரிய ஆர்ட்டிஸ்ட்னு வித்தியாசம் இல்லாம எல்லோரிடமும் அவர் இயல்பா பழகுறது ஆச்சரியமா இருக்கு.”